இரவு பத்து மணியிருக்கும்.அலுவல்களை முடித்து கொண்டு, கடைசி பேருந்தில் வீட்டுக்கருகில் வந்து இறங்கினேன், என்னுடன் தரிப்பிடத்தில் ஒரு சீன பெண்ணும்(தனியாக), நான்கு அவுஸ்திரேலிய ஆண்களை கொண்ட ஒரு கும்பலும் இறங்கினார்கள். அந்த கும்பல் கொஞ்சம் சத்தமாக சிரித்து பேசிக்கொண்டு வந்தார்கள்.
பேருந்து தரிப்பிடத்துக்கு எதிரே உள்ள ஒழுங்கையில் தான் நான் வசிக்கும் வீடிருக்கு, அதனால் பாதையை கடந்து மற்ற பக்கத்துக்கு சென்றேன், நான் கடந்த நேரம் பார்த்து, அந்த பெண்ணும் பாதையை கடந்தார், அவர் வீடும் ஒரே ஒழுங்கையில் தான் இருக்கு போல என்று நினைத்து கொண்டேன். Eye contact ஏற்படவில்லை.
நான் பாட்டுக்கு பாட்ட கேட்டுக்கொண்டு நடந்தேன், அந்த பெண் எனக்கு முன் நடந்து கொண்டிருந்தார். அவர் தான் முதலில் ஒழுங்கைக்குள் நுழைந்தார், அதன் பின் நான் நுழைந்தேன், இருவரும் ஒரே அளவு வேகத்தில், ஒரு சிறிய இடைவெளி வித்தியாசத்தில் நடந்து கொண்டிருந்தோம்..
அதனால் நானும் ஒழுங்கைக்குள் நுழைந்ததை அந்த பெண் உணர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. எங்கள் ஒழுங்கைக்குள் நிறைய மரங்கள் உண்டு, தெரு விளக்குகளை மறைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும், அதனால் பல இடங்களில் நடைப்பாதையில் போதிய வெளிச்சம் இருக்காது.
ஒழுங்கைக்கு நடுவில் அப்படி ஒரு வெளிச்சம் இல்லாத இடம் இருந்தது. அந்த பெண்ணும் நானும் ஒரே வேகத்தில் தான் நடந்து கொண்டிருந்தோம், அந்த வெளிச்சமற்ற இடத்திற்கு கிட்ட தான் என் வீடு இருக்கு.. கொஞ்ச நேரத்தில் அந்த பெண் அவர் வேகத்தை அதிகரிப்பதை உணர்ந்தேன்.
எப்போதுமே இரவு நேரங்களில், பொது இடங்களில், நான் செல்லும் பாதையில், ஒரு பெண் தனியே நடந்து சென்றால், இயல்பாகவே நான் மற்ற பக்கத்தில் உள்ள நடைப்பாதைக்கு மாறிவிடுவேன். இடைவெளி வைத்தே நடப்பேன். அதனால் இயல்பாக என் வேகத்தை குறைத்து கொண்டேன்..
எனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து கொண்டே வந்தது, கிட்டத்தட்ட ஒரு 2, 3 நிமிட இடைவெளி இருக்கும். காதுகளில் 'விஜய்' பாடிக்கொண்டிருந்தார், மெல்ல இளையராஜா பாட ஆரம்பித்தார், அதனால் நிதானமாகவே நடந்தேன்.
அந்த பெண் அந்த வெளிச்சமற்ற இடத்தை நெருங்கினார். அப்போது நான் திட்டமிட்டது போல தெரு விளக்கு நேரடியாக நடைப்பாதையில் விழும் இடத்தில் தான் நடந்து கொண்டிருந்தேன். இருட்டான அந்த நடைப்பாதை பகுதிக்குள் அந்த பெண் நுழைந்தார். நான் வெளிச்சத்துக்கு கீழ், தூரத்தில் நடந்து கொண்டிருந்தேன்.
இருண்ட அந்த நடைப்பாதையின் நடு பகுதியை அடைந்தவுடன் அந்த பெண் சட்டென்று திரும்பி பார்த்தார். நான் தூரத்தில் இருப்பதை கண்டு கொண்டார். கொஞ்ச நேரத்தில் அவவின் வேகம் குறைந்தது..பழைய இயல்பான வேகத்தில் நடக்க வெளிக்கிட்டார். எனக்கு அப்போது தான் ஆறுதலாய் இருந்தது.
அந்த பெண் என்னை சந்தேகித்தார் என்று நான் சொல்லவில்லை, என்னை பற்றிய அவர் judgement என்னவென்று எனக்கு தெரியாது, ஆனால் அந்த பெண்ணுக்கு நான் அப்போது ஒரு perceived threat. அந்த இடைவெளி தேவையற்றது. எனது ஒழுக்கம் எனக்கு தெரியும், ஆனால் அது அந்த பெண் அறிய வாய்ப்பில்லை.
இருப்பினும்,
அந்த பெண்ணை போல், எனக்கு ஒரு போதும், இன்னொரு பாலினத்தை சேர்ந்த நபரை கண்டு ஒரு அச்ச உணர்வுடன், சந்தேக பார்வையுடன் நகர வேண்டிய கட்டாயம் இருந்ததில்லை. அந்த கட்டாயம் அந்த பெண் போல் பல பெண்களுக்கு எப்போதமே தங்கள் பாதுகாப்பு சார்ந்து இருக்கு. இனம், மதம் கடந்த ஒரு கட்டாயம் அது.
நான் மெதுவாய் நடப்பதும் ஒரு வித ஆதிக்கம் தான். அங்கு அந்த பெண்ணுக்கு மட்டும் இல்லை, எனக்கும் அந்த பெண்ணின் பார்வையில் நான் ஒரு perceived threatஆக தான் தெரிந்தேன். இந்த சூழலை எப்படி மாற்ற போகிறோம் என்று தெரியவில்லை. அடுத்த தலைமுறையாவது இடைவெளி இன்றி நடை பழகட்டும்..
தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர்
8/11/2019
/அடுத்த தலைமுறையாவது இடைவெளி இன்றி நடை பழகட்டும்../🔥🔥
ReplyDelete