{போன வருடம் ராமாயணத்தை களமாக கொண்டு எழுத ஆரம்பித்து, பிறகு பாதியிலேயே நிறுத்திய ஒரு சிறு கதையின் முதல் பகுதி, மீண்டும் பதிவிடுகிறேன்... Work in progress. Grammar,spelling errors இருக்கும்.. } 👇
மடிந்த யானையின் உடல் மீது முதுகை சாய்த்தபடி நிமிர்ந்திருந்தான் வேந்தன். அவன் எதிரே மலையொன்றை சாய்த்த களிப்பில், கையில் வில்லுடன் தன் வெட்டு காயங்களை மதிப்பிட்டபடி நின்று கொண்டிருந்தான் ஒரு உளவாளி.
இனி இவனால் எழ முடியாது என்று இளநகைத்தப்படி அந்த உளவாளி
"எங்கள் இறைவனை வேண்டு வேந்தா. மோட்சமாவது கிடைக்கும்.. இறந்திருக்கும் யானை அறியாது அதன் மடமையை, ஆனால் நீயோ திக்கு திசை தெரியாமல் ஓடும் மதம் பிடித்த யானையல்ல. நீ தெரிந்தே தான் ஒரு கொடூரனின் படையை வழிநடத்தினாய், உன் வீரத்தை நான் போற்றுகிறேன், ஆனால் எங்கள் தர்மம் உன் வீரத்தை விடவும் வலியது. உன்னை காப்பாற்ற மக்களை கேடயமாக்கி, அவர்களுக்கு நடுவே ஒளிந்து கொண்டிருக்கும் உன் தலைவன் வர மாட்டான். என் இறைவன் கரிசனையின் விளைவான என் சுவாசக்காற்று மட்டும் தான் உன் உயிரின் கடைசி செய்தியை இனி ஏந்தி செல்லும். இறைவனை வேண்டி சொல், உன் கடைசி செய்தி என்ன? "
கடும் வலியிலும் புன்னகைக்க மறவாது வேந்தன்..
"புதுறுக்குள் ஒளிந்துகொண்டு, நஞ்சு தடவிய அம்பை வீசி, என்னை மண்ணில் சாய்த்து, அம்பை முறித்து வாள் வீச எழுந்த என்னை முதுகில் குத்தி, நான் முழுவதும் சரிந்துவிட்டேன் என்று அறிந்தபின் என் முன் வந்து நின்று வீரா..வேசத்துடன் பேசும் உனக்கு கோழை என்ற பெயரை தவிர வேறேதும் பெயர் உண்டா?. இருந்தால் சொல்!."
என்று முழங்கினான்
வலி வெளிப்படா வேந்தனின் குரல் அலையில் அதிர்ந்தது உளவாளியின் உடல்..
சற்று தடுமாறிய அவன், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,
"வீரத்துக்கு தந்திரம், விவேகம் எனும் பெயர்களும் உண்டு. அவற்றை கோழைத்தனம் என்று பழித்தன் விளைவு தான் உன் சரிவுக்கு காரணம். வேந்தனை வீழ்த்தியவன் என்ற பெயர் தரும் மமதை போதாதா எனக்கு?.. உன் இறுதி நிமிடங்களை ஏளனம் செய்ய விரும்பவில்லை.. அதனால் சொல்கிறேன்.. ராமதீசன் என் பெயர்.. "
என்றான் அந்த உளவாளி..
அடர்த்தியான அந்த தம்பளை காட்டின் பசுமை கூரையை கிழித்துக்கொண்டு நுழைந்தது கதிர் அம்புகள். அந்த அம்புகள் வெட்டி பாய்த்த வெளிச்சத்தின் கீழ் நின்று கொண்டிருந்தான் அந்த அனுபவமற்ற உளவாளி. அவன் முகத்தில் ஒரு பயம் படர்ந்திருப்பதை வேந்தன் காண தவறவில்லை. வெளிச்சத்தில் தெரிந்த அவன் உடல்மொழியை வைத்து அவன் இன்னும் களம் கானா இளைஞன் என்பதை வேந்தன் உணர்ந்து கொண்டான்,
"இவன் ஆரிய அதிகார வர்க்கத்தின் உற்பத்தி, ஆரியத்தின் ஆதிக்கத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகார தோரணைகள், அலங்கரிக்கப்பட்ட அடிமைகள்"...என்று தனக்குள் நினைத்து கொண்டான் வேந்தன்.
"ராமதீசன்.. அது என்ன ராமன்?, தீசனுக்கு முன்? எதிரியின் முகாமில் சேர மன மாற்றம், பேராசை, வஞ்சகம் போதாதா? பெயர் மாற்றமும் தேவை தானா?"
என்று கேட்டான் வேந்தன். கேள்வியுடன் வேந்தன் முகத்தில் தோன்றிய புன்சிரிப்பு வாட முன் ராமதீசன் கொந்தளிப்புடன்,
"அது மாற்றம் அல்ல மூடா!, அது பக்தியின் அடையாளம். உனது இறுதி செய்தியை சொல். அதன் தன்மையை பொறுத்து அதை உன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதா இல்லையா என்று முடிவெடுக்கிறேன். இறக்கும் தருவாயிலும் விதண்டா வாதம் செய்யாதே. இல்லை என்றால் மாய லட்சியத்துக்காக போரிட்டு மாண்ட உன் தோழர்களை போல், நீயும் இந்த காட்டில் மண்ணோடு மண்ணாகி தொலைந்துவிடுவாய்.
என்று எச்சரித்தான் ராமதீசன்!
போர் மரபில் கடமையாக பின்பற்றும் அறத்தை, கரிசனை போல் பிச்சை போடுகிறானே இந்த பதர் என்று உணர்ந்து கொண்ட வேந்தன்,
"என் நாட்டுக்கு படையெடுத்து வந்த நீ! போர் மரபை, மீறுவதை ஏதோ சாணாக்கியம் என்று பெயரிட்டு மலுப்பி... என் ஊர் மீது போர் தொடுத்துவிட்டு, ஊர் மக்களை என் தலைவன் கேடயமாக பயணப்படுத்துகிறான் என்று பழிக்கிறாய்.. என் காடுகள் எனக்கு அரண், ஆனால் அவை உனக்கு தடங்கல், என் நாட்டின் வளங்கள் எனக்கு தெய்வம், உனக்கோ அவை வெறும் பொற்காசு, என் ஊர் என் கூட்டின் இருப்பு, உனக்கு அது கொடி நடும் போர்க்களம், ஆகையினால் அதில் வாழும் என் மக்கள் உன்னை பொறுத்தவரை என் தலைவனை காக்கும் கேடயங்கள். ஓம். கேடயங்கள் தான். மக்கள் மட்டுமல்ல, என் தலைவனும் ஒரு கேடயம் தான். தமிழ் இறைமையின் கேடயங்கள் நாங்கள். இறுதி மூச்சு உள்ள வரை அந்த இறைமையை காப்போம், அதை பறிக்க உன் இறைவனே வந்தாலும் அவனையும் எதிர்ப்போம்!" என்று சீறினான்.
வேந்தனின் சீற்றத்தை கண்டு ஆட்டம் கண்ட ராமதீசன்.. என்ன பேசுவதென்று தெரியாமல் சற்று தடுமாறினான்.
ஆனால் வேந்தனின் சீற்றமோ அடங்கிவில்லை..ராமதீசனின் தயக்கத்தை கண்ட வேந்தன் சத்தமாக சிரித்தான், அமைதியான அந்த தம்பளை காட்டில் அவன் சிரிப்பு சத்தம் இடி போல் விழுந்தது. அந்த சத்தம் காடெங்கும் எதிரொலித்தது..
"என் இறுதி செய்தியை உன் மூச்சுக்காற்று ஏந்தி செல்லும் என்றாய் அல்லவா. அந்த எதிரொலியை கேட்டாயா? இங்கே இந்த காட்டில் தவழும் தென்றல் என் முன்னோர்களின் மூச்சுக்காற்று தான்! அது ஏந்தும் என் செய்தியை! ஒரு போரின் வெற்றி, தோல்வி, போர்க்களத்தில் உடலை விட்டு பிரியும் உயிர், மண்ணில் விதையாகும் உடல் பற்றி என் போன்ற படை வீரர்கள் கவலைப்படுவதில்லை. என் தலைவனும் எங்களை அப்படி வளர்க்கவில்லை. என் உறையிலிருந்து வாள் விடுபடும் போது, என் ஆழ்மனதில் இருந்து வாய் வழியே விடுபட்ட விடுதலை முழக்கம் தான் போராளியாகிய எனது முதல் செய்தி, அதே முழக்கம் தான் என் இறுதி செய்தியும் கூட. இதை நீ சொல்லி தான் என் மக்கள் அறிய வேண்டும் என்றில்லை! இந்த செய்தியை ஏந்த எனக்கு துரோகிகளின் சுவாசக்காற்று தேவையில்லை. இந்த கானகத்தில் தவழும் தென்றல் காற்றும், இந்த மண்ணின் சுகந்தமும், அதை எங்கள் வருங்காலத்திற்கு செய்தியாகவும், உன் போன்றோரின் அடுத்த தலைமுறைக்கு எச்சரிக்கையாகவும் கடத்தும்... என் உடல் மண்ணோடு மண்ணாகும் என்றாய், என் மண்ணில் என் உடல் மண்ணாவது எனக்கு பெருமை தான் சிறுமை அல்ல!
இது என் நிலம்!
இந்த மண்ணில் விளைந்ததை உண்டு வளர்த்த இந்த உடலை இந்த மண்ணுக்கே வழங்குவதில் எனக்கு ஒன்றும் சிறுமையில்லை. இடுகாட்டு மரபினருக்கு ஆரியன் யாகம் வளர்க்கும் சுடுகாடு தான் நரகம், இடுகாடு அல்ல! இங்கே மரணிப்பதை பற்றி கவலைப்பட வேண்டியது நான் அல்ல. நீ தான்..
என்று சொல்லிவிட்டு ஏளனமாக சிரித்தான் வேந்தன்.
தூரத்தில் குதிரைகள் வரும் சத்தம் கேட்டது. ராம தீசனுக்கு செய்ய வேண்டிய கடமை ஒன்று மிச்சம் இருந்தது..நிலவு முகம் காட்ட முன் காட்டை கடக்க வேண்டும்.. வேந்தனின் உயிரும் ஒரு சில நிமிடங்கள் மட்டும் தான் தாக்குப் பிடிக்கும் என்பதை உணர்ந்து கொண்ட ராம தீசன், அருகில் இருந்த அவன் குதிரை மீது தாவி, திருமலையை நோக்கி பறந்தான்..
மண்ணை கைகளால் இறுக பிடித்தப்படி வேந்தன் துயில் கொண்டான்..காற்றில் அவன் இறுதி செய்தி தவழ்ந்து சென்றது...
விடியும் என்ற நம்பிக்கையுடன் கதிரவன் மறைந்தான்
நன்றி
தமிழுடன்
-Mr. பழுவேட்டரையர்
Comments
Post a Comment