ஆரம்பத்துல யாராவது என் தாயை பழித்து பேசினாலோ, பொதுவாக அநாகரிகமாக பேசினாலோ, அவர்களுக்கு சரி சமமாக அவர்கள் மாதிரியே எதிர்வினையாற்றுவேன். என் அம்மாவ நீ திட்டினா உன் அம்மாவா நான் திட்டுவேன் போன்ற போக்கே என்னிடம் அதிகம் காண கூடியதாக இருந்தது.
உணர்வுகளின்,
சுயத்தின் வெளிப்பாடு தான் மொழியின் முக்கிய அடிப்படை பயன்பாடாகிறது.
ஒருவனின் கோபத்தில் வெளிப்படும் உணர்வே பெரும்பாலும் அவனது பண்பை, ஒரு விடயத்தை அவன் கையாளும் விதத்தை வெளிப்படுத்துகிறது.
ஒரு பாலினத்தை, ஒரு தொழிலை ஒரு அடையாளத்தை இழி சொல்லாக மாற்றி இன்னொருவர் மீது நாம் நம் வெறுப்பை கக்கும் போது, அந்த குறிப்பிட்ட தனி நபர் மீதான நமது வெறுப்பு மட்டும் அங்கு வெளிப்படவில்லை. அங்கு இழி சொற்களாக நான் பயன்படுத்தும் சொற்களில் நம் அரசியலும் வெளிப்படுது.
பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகளின் வந்தேறி என்ற சொற் பயன்பாடும், பிற்போக்கு திராவிடர்களின் 'அகதி நாயே' என்ற சொல்லின் பயன்பாடும் வெளிப்படுத்தும் அரசியலானது அவர்களின் மனிதத்தின் தரத்தை உணர்த்தி நிற்கிறது.
'வந்தேறி', 'அகதி நாயே' போன்ற சொற்களில் மட்டும் அல்ல, சாதிய, பாலின அடையாளங்களை இழி சொற்கலாக மாற்றி நாம் பேசும் போதும் இதுவே வெளிப்படுகிறது.
ஆங்கில மொழி இழி சொற்களில் இருக்கும் ஒரு வித பாலின சமத்துவ போக்கை தமிழ் இழி சொற்களில் காண கிடைப்பதில்லை. ஒரு cuntக்கு ஆங்கிலத்தில் ஒரு dickhead இருக்கு. ஒரு douchebagக்கு ஒரு scumbag இருக்கு.
ஓம், என்னை பொறுத்தவரை இழி சொற்களையும் முற்போக்கு பிற்போக்கு என்று வகைப்படுத்தலாம் என்று தான் சொல்வேன்.
ஆங்கில மொழியில் ஒரு இன குழுவின் நிறத்தை, அடையாளத்தை இழி சொல்லாக பயன்படுத்துவது தவறென்ற உணர்வு வந்துவிட்டது. ஆனால் தமிழ் சமூகத்தில் அத்தகைய உணர்வு இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவான சொற்களை, நம் கேவலமான சிந்தனை முறை ஊடாக இழிவாக மாற்றும் திறன் நம் இனத்தவர் மத்தியில் அதிகமா காண கூடியதாக இருக்கு.
இழி சொற்கள் தொடர்பான, என் மொழி தொடர்பான இந்த ஒரு உரையாடல் எனக்குள்ள இப்ப ஒரு சில வருடங்களாக தொடர்ந்து பயணிக்கிறது. Homophobic attitudeகளில் இருந்து விடுபடும் போது ஓர்பாலின சேர்க்கையை இழிவுப்படுத்தும் விதமான சொற்களை தவிர்க்க ஆரம்பித்தேன்.
அதன் பின் மொழியில் உள்ள ஆணாதிக்க பண்புகளை பற்றிய புரிதல் வர வர பெண்களை இழிவுப்படுத்தும் விதமான சொற்களை தவிர்க்க ஆரம்பித்தேன்.
பாலியல் தொழிலாளர்கள், தொழிலை சுற்றி நடக்கும் அரசியலை பற்றிய புரிதல் ஏற்பட அந்த தொழில்,தொழிலாளர்களின் அடையாளங்களை இழிவுப்படுத்தும் விதமான சொற்களை தவிர்க்க ஆரம்பித்தேன்.
இப்படி சமுக taboos மொழியில் செலுத்தும் தாக்கத்தை உணர உணர எனது மொழியில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. மொழி மாற மாற என் சிந்தனையிலும் மாற்றம் தெரிகிறது.
அந்த சிந்தனை மாற்றம் மேம்பாடா அல்லது குறைப்பாடா என்பதற்கான விடை வருங்காலத்தில் என் இன்றைய நடவடிக்கைகளுக்கான என் சுய பொறுப்புக்கூறலின் ஊடாகவே மதிப்பிட முடியும் என்று கருதுகிறேன்.
இப்படி நான் ஒரு work in progress. என் அரசியல் என் மொழியிலும் மாற்றத்தை உருவாக்குகிறது. என் மொழி என் சுயத்தை வழிநடத்தி, என் சிந்தனையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. என் மொழி 'நான்' என்ற என் சுயத்தின் மொழியாகிறது.
ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் ஓரளவுக்கு எழுத, பேச கூடிய என்னால், தமிழில் மட்டுமே ஒரு சுயம் சார்ந்த உரையாடலை நேர்மையாக நடத்த/முன்வைக்க முடிகிறது.
என் சுயத்தின் மொழியாக, என் சிந்தனை மொழியாக தமிழ் இருப்பதினால் உருவான மாற்றம் தான் இது என்று எண்ண தோன்றுகிறது. இது ஆங்கிலத்தின் குறைப்பாடல்ல, தமிழ் மொழி என் அடையாளத்தின் அங்கமாக இருப்பதினால், என் சுயத்திற்கு அது தாய் போல் நெருக்கமாக இருக்கிறதோ என்னமோ.
என் மொழி என் சுயத்தின் முகம் என்றால், அது என் இயல்பாகும் என்றால், அது என்னை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த கூடாது அல்லவா?. நான் எதுவாக இல்லையோ, எதுவாக இருக்க விரும்பவில்லையோ, அதுவாக என் மொழி இருந்தால், அது என் சுயத்தின் மொழியாக இருக்குமா?.
அதனால் தான் ஆங்கிலத்தில் இழி சொற்களை சரளமாக பேசும் என்னால் தமிழில் அவற்றை எளிதில் பேச முடிவதில்லை.
கோபம் ஒருவனின் சுயத்தை இழக்க செய்யும் வலிமை மிக்க உணர்வு, அந்த உணர்வை பக்குவப்படுத்த விரும்பினேன். பேச்சை விட எழுத்தில் அந்த பக்குவத்தை எளிதில் பழகிக்கொள்ளலாம் என்று உணர்ந்தேன்.
அதனால் எழுத்துக்கள் ஊடாக என்னை கோபப்படுத்த, என் மீது பிறர் உமிழும் வெறுப்பை பக்குவத்துடன் அணுகலாம் என்று முடிவெடுத்தேன். இது என் கோபத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் எடுத்த முடிவல்ல, என் கோபத்தை பக்குவப்படுத்தும் நோக்குடன் நான் எடுத்த முடிவு.
கட்டுப்படுத்தல், ஒரு உணர்ச்சியை தடை செய்யும் செயல், பக்குவப்படுத்தல், அதை ஆக்கபூர்வமானதாக மாற்றும் செயல்.
அதனால் தான் திமுகவினர் என்னை அகதி நாய் என்று திட்டும் போதும், என் தாயை அவர்கள் பழிக்கும் போதும் என் கோபம் பதில் எல்லாம் சற்று வேறுபட்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
அதனால் வந்தேறி, அகதி நாய் போன்ற சொற்களை அதன் negative connotationsஐ உணர்ந்த பின்னும் ஒருவனால் பயன்படுத்த முடியும் என்றால், அந்த அடையாளங்கள் மீதான வெறுப்பு அவன் சுயத்தின் இயல்பாக மாறிவிட்டது என்று தான் பொருள்.
என் சுயத்தை நான் அப்படி சீரழிக்க விரும்பவில்லை. இங்கே எனது உரையாடல் தற்காலிகமானது, ஆனால் என் சுயத்துடனான உரையாடல் மரணம் வரை பயணிக்கும், அதற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது.
நன்றி.
தமிழுடன்
Mr.பழுவேட்டரையர்
(3/7/2019)
Comments
Post a Comment