இலவசம் அல்ல உரிமை!
அதை அரசு வழங்குவதில் எந்த தவறும் இல்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு தன் ஆட்சிக்காலத்தில் கொண்டு வருவது, அல்லது ஒரு எதிர்க்கட்சியாக அத்தகைய திட்டங்களை முன்மொழிந்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற வைப்பது போன்ற செயற்பாடுகளை தான் மற்ற நாடுகளில் காணலாம்.
அங்கே நோக்கம் மக்களின் மேம்பாடு, அந்த நோக்கம் செயல்படுத்தப்படும் போது, அது மக்களின் உரிமையாக, அரசின் கடமையாக செயல்படுத்தப்படுகிறது.
ஆனால் திராவிடர்களோ, மக்களின் பணத்தில் அறிவிக்கும் திட்டங்களை, ஏதோ மக்களுக்கு அவர்கள் கட்சி போடும் பிச்சை போல விளம்பரப்படுத்தி, அதை தேர்தல் நேரத்தில் வாக்குகளை வாங்கும் ஒரு கேடுகெட்ட வியாபாரமாக்கி, மக்கள் நல திட்டங்களை, ஏதோ நாயுக்கு போடும் எலும்பு துண்டுகள் போல, மக்களிடம் போட்டி போட்டு வீசுகிறார்கள்.
மக்களின் சுயமரியாதையும் அங்கே விலை பேசப்படுகிறது. இந்த திராவிட செயல் ஊடாக உரிமைகள் இலவசங்களாய் சிறுமைப்படுத்தப்படுகிறது.
ஒரு இலவசத்தையோ/சமூக நல மேம்பாட்டு திட்டத்தையோ அறிமுகப்படுத்த முன், அது தொடர்பான அடிப்படை தகவல்களை
▪️அந்த திட்டத்தை ஏன் கொண்டு வருகிறோம்.
▪️அதனால் சமூகத்தில் எத்தகைய ஒரு விளைவை ஏற்படுத்த முனைகிறோம்.
▪️இந்த திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்த போகிறோம்.
▪️அதற்கான பணம் எவ்வளவு ஒதுக்கப்படும்.
▪️அந்த சேவையை, பொருளை வழங்கும் ஒப்பந்தம், ஏலம் எவ்வாறு நடக்கும், அதை அரசு எவ்வாறு அமுல்படுத்தும்
போன்ற அடிப்படை தகவல்களை மக்கள் முன் வைக்க வேண்டும், அது தொடர்பான வாத விவாதங்கள் நடக்க வேண்டும், இப்படி எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு, அது எதையும் பின்பற்றாமல், எடுத்தான் கவுத்தான், என்றாற்போல், தேர்தல் நேர கூத்தாக சமூக நல திட்ட அறிவிப்புகளை மாற்றியிருக்கு திராவிடம்.
சோறு போடுறது அற செயல் தான். ஆனால் மக்களின் பணத்தில், மக்களை பந்திக்கு அழைத்து, அவர்கள் முன் இலையை வைத்து விட்டு, நீ எனக்கு ஓட்டு போட்டா உனக்கு சோறு தருவேன்னு ஒருத்தன் சொல்லுறதும், நீ எனக்கு ஓட்டு போட்டு, உனக்கு சோறு கூட leg pieceஉம் வைப்பேன்னு இன்னொருத்தன் சொல்லுறதும் அறம் இல்லை. அது அறம் மிக்க செயலை தரங்கெட்ட செயலாக்கும் அரசியல். இதை தான் திராவிடம் இன்று செய்கிறது.
-Mr. பழுவேட்டரையர்
28/3/2021
Comments
Post a Comment