ஈழத்தில் சாதியத்தின் நிலை, தீண்டாமையின் நிலை எப்படி இருக்கிறது. போருக்கு முன் சூழல் எப்படி, போருக்கு பின் சூழல் எப்படி என்றெல்லாம் நிறைய விவாதங்கள் நடப்பதை காண கூடியதாக இருக்கிறது.
இங்கே எல்லா விவாதங்களும் அவற்றை தொடுப்பவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் கருத்து நிலை சார்ந்த பற்றின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுகிறதே தவிர, இதில் எங்கும் வரலாறு சரியான முறையில் பதியப்படுவதும் இல்லை, பேசப்படுவதும் இல்லை.
ஈழத்தில் உள்ள சாதிய கட்டமைப்புகள்,
மலையகத்தில் ஒரு வடிவத்திலும்,
தமிழீழத்தில் இன்னொரு வடிவத்திலும்,
சிங்களவர்கள் மத்தியில் இன்னொரு வடிவத்திலும் இருக்கிறது.
இந்த மூன்று மக்கள் கூட்டம் மத்தியிலும் உள்ள சாதி கட்டமைப்புகள் கூட ஒரே வடிவத்தில் இல்லை. சாதிய படிநிலைகளில் வித்தியாசம் உண்டு, சாதிய அடையாளங்களில் வித்தியாசங்கள் உண்டு, இவ்வாறாக நிலத்தின் அடிப்படையில் கட்டமைப்புகள் மாறுகின்றன. ஊருக்கு ஊர் கூட சில நேரங்களில் கட்டமைப்புகள் மாறுகிறது.
வழக்கமா ஈழத்தில் உள்ள சாதியம் பற்றி பேசுபவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் சாதியம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள். இதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது.
தற்போதைய சூழலில் சாதிய கட்டமைப்புகள் சிங்கள தேசத்திலும் மலையகத்திலும் கூட தான் வலுவாக இருக்கிறது. ஆனால் அதை பற்றிய உரையாடல்கள் இங்கு பெரும்பாலும் நடப்பதில்லை. தமிழர்களின் தாயக நிலமான தமிழீழத்திலும் சாதி எனும் கொடிய நோய் இருக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் சிங்கள தேசத்தில் இருப்பது போன்று தமிழீழத்தில் சாதியம், இயல்பாக்கப்பட்ட ஒரு தேசிய குணாதிசயமாக இல்லை. மலையகத்தில் இன்றுவரை எம்மவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் ஒரு கூட்டம், திட்டமிட்டே, தொழிற்சங்கங்களின் சாதியவாதத்தை மூடி மறைக்கின்றனர்.
அதனால் நேர்மையாக ஈழத்தில் சாதியத்தின் இன்றைய நிலை பற்றி நாம் அறிய வேண்டும் என்றால். எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது.
வரலாற்றில் எல்லா பக்கங்களையும் புரட்ட வேண்டிய தேவை இருக்கிறது..
எல்லாருடைய நோக்கங்களையம் நாம் ஆராய வேண்டிய தேவை இருக்கிறது.
குறிப்பாக ஈழத்தில் தலித்திய கருத்தியலை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் கூட்டத்தின் நோக்கங்கள் உற்பட அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இலக்கிய வட்டம், வாசகர் வட்டம் என்று குறுகிய வட்டங்கள் செய்யும் மூளை சலவைகளை, ஆதாரமற்ற சோடிப்புகளை பற்றியும் பேச வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.
இங்கே ஈழத்தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இடையில் ஏதோ சண்டை இருப்பது போலவும், அதற்கு பின்னால் சாதிய கண்ணோட்டம் ஒன்று இருப்பது போலவும் ஒரு போலி பிம்பத்தை கட்டமைக்கவும் நிறையே பேர் பாடுபடுவதை காண கூடியதாக இருக்கு.
மலையகத் தமிழர்களாகட்டும், ஈழத்தமிழர்களாகட்டும். கால காலமாக ஈழத்தில், தமிழர்கள், தமிழர்களாக இருக்கும் ஒரே காரணத்துக்காகவே சிங்கள பேரினவாத அரசால் ஒடுக்கபப்டுகிறார்கள், அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஆனால் அந்த ஒடுக்குமுறையின் மீது கவனம் செலுத்தாமல், இல்லாத சண்டைகளை இருப்பது போல காட்ட முனையும் கூட்டத்தின் நோக்கம் அறிய வேண்டிய தேவை இருக்கிறது தானே ..
ஈழத்தின் அரசியல் வரலாற்றில், மலையகத் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது ஈழத்தமிழர்கள் மட்டும் தான். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல்களும், போராட்டங்களும், சிங்கள மக்கள் மத்தியிலா எழுகிறது ? இல்லை முஸ்லீம் மக்கள் மத்தியில் இருந்தா எழுகிறது.? மலையகத்தில் தமிழர்கள் போராடினால், அவர்களுக்கான போராட்டம் தமிழீழத்திலும் நடக்கிறது. குடியுரிமை போராட்டம் தொடங்கி அடிப்படை சமபள உரிமை போராட்டம் வரையில் அந்த ஒற்றுமை தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று ஈழத்தமிழர்களின் முதன்மை கட்சியாக, ஈழத்தமிழர்களின் ஆதரவை பெற்ற பெரும் கட்சியாக இருக்கும் இலங்கை தமிழரசு கட்சி, மலையக உறவுகளின் உரிமைக்காக குரல் கொடுத்து தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான்.
அந்தளவுக்கு பின்னி பிணைந்திருக்கிறது ஈழ மலையக உறவு.
ஆனால் இதையெல்லாம் பற்றி ஆராயாமல், பேசாமல், வசதியாக இவ்வாறான வரலாற்று உறவுகளை எல்லாம் இருட்டடிப்பு செய்து, இல்லா சிக்கல்களை உருவாக்க முயற்சிக்கும் கூட்டத்தின் உண்மையான நோக்கங்களை, அம்பலப்படுத்தி கொண்டே தான் நாம் நிறைய அரசியல் பேச வேண்டி இருக்கு. ஒவ்வொன்றாக இனி கதைக்க ஆரம்பிப்போம். !
தொடரும் ..
-Mr.பழுவேட்டரையர்
23/05/2023
Comments
Post a Comment